விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

29.8.14

என்னைத் தொட்ட உண்மைச் செய்தி

படித்ததில் பிடித்தது - 02
 

என்னைத் தொட்ட உண்மைச் செய்தி


கோபிகிருஷ்ணா ஒரு முன்னணி அட்வகேட். கனடாவிலிருக்கும் அவருடைய உறவினர் சொன்ன அந்த விஷயம், இவரை வெகுவாக யோசிக்க வைத்தது.

என்ன அது?

ஓர் இசைக் குழந்தை!...



கனடா உறவினருக்கு ஒரு பெண்குழந்தை. சின்ன வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தனி அறை. அதில் முழுக்க முழுக்க இசை வாத்தியங்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

பியானோ, கிட்டார், வயலின், வீணை, கோட்டு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், கீ போர்ட் இப்படி அத்தனை இசைக் கருவிகளும் அந்தக் குழந்தைக்கு நட்பு பாராட்ட காத்திருக்கும்.

எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அந்தந்த சமயங்களில் அந்தக் குழந்தை இசைக் கருவிகளுடன் பேசும், விளையாடும், வருடும், சத்தங்களை சுவாசிக்கும்.

கருவிகள் பழுதுபட்டால் சுணங்காமல் சீர் செய்து கொடுத்தார் அப்பா. குழந்தை வளர்ந்தாள். டாக்டருக்குப் படித்தாள். அத்துடன் தனியே ஒரு இசைக் குழு வைத்து அசத்துகிறார்.

வளரும் சூழ்நிலை நிறைய மாற்றங்களை, பொற்காலங்களை ஏற்படுத்தித்தரும் என்கிற விஷயம்தான் கோபியை யோசிக்க வைத்தது.
பலன்?

திருமணமானதும் மனைவியிடம் இதைச் சொன்னார். கலந்து பேசினார்கள்.

பலன்?

கனடா தம்பதிகளைவிட புதிதாய், மேலும் சிறப்பாய் ஒரு புதிய முயற்சிக்கு தீர்மானித்தார்கள்.

திருமதி சுமதி வாசகர்களுக்கு நன்கு அறிந்தவர்தான். பிரபல வக்கீல், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். மிகவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெகு பர்சனலாக இருந்தாலும், நல்ல நோக்கம் கருதி தங்கள் முயற்சியைப் பற்றி பேசினார்.

அதை அவர் குரலிலேயே கேட்போமா?

"கோபி சொன்னதும்..... அந்த நோக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது.

குழந்தைகளை அது அதன் போக்கிலே விட்டுடணும்னு சொல்றதை ஒப்புக்க முடியாது. நாம எதை நல்லதுன்னு நினைக்கறமோ அதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கறது தப்பில்லைன்னு நினைக்கறேன்.

சாப்பிட, ஸ்கூலுக்குப் போக, படிக்க கத்துத்தரலையா?

இது அதைவிட ஒருபடி உசத்தி! அபிமன்யு வயித்துல இருக்கும்போதே சக்கர வியூகம் கத்துக்கிட்டதா இருக்கே?

நோக்கம், பிறக்கும் குழந்தை ஒரு நல்ல இந்தியக் குடிமகனாய் இருக்க வேண்டும். நாம் தேசத்திற்குச் செய்யும் தொண்டு அது! 


அடிப்படையாக இசையை எடுத்துக்கொண்டோம். காரணம்?

இசை நம்மை பக்குவப்படுத்தும். மிதக்க வைக்கும். மனசை லேசாக்கும். பரவசம் தரும். நெகிழ்வோம். மனசு சரியில்லாத ஒரு மூடில் இசை நம்மை மாத்துது இல்லையா? இசை குரூரத்தை வேரறுக்கும். இசைதான் மனித வாழ்வின் அடி நாதம்.

கவிதை, இலக்கியம், இசை, ஓவியம் இவைகள் மனிதனை மனிதனாய் தொடர வைக்கும் என்பது என் கருத்து.

தாய்மைப் பேறு அடைந்து இரண்டு மாதத்தில் எங்கள் முயற்சியை ஆரம்பித்தோம்.

அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இசை ஒலிக்க ஆரம்பித்தது. ஹாலில், சமையல் கட்டில், வராந்தாவில் என்று எல்லா இடத்திலும் காற்றுபோல வீட்டுல் இசை உள் நிரம்பி இருந்தது, இசை. பாடல்களா, அதுவா இதுவான்னு எதுவும்னே தீர்மானம் பண்ணிக்கலை.

இசை! அவ்வளவுதான்! எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் ரவிசங்கர், ஹரி பிரசாத் சௌராஸியா, ஜாகீர் ஹுசைன், அல்லாரக்கா, பர்வீன் சுல்தான், வெஸ்டர்ன் கிளாஸிக்கல், தவிர இந்தியா டுடே கலக்ஷென்ல ஸ்பேஸ், விண்ட், ஸீ இப்படி எல்லா கேஸட்டும் போட்டுட்டே இருந்தோம்.

தாயின் வயிற்றில் நிரம்பும் உணவு குழந்தைக்கு போய்ச் சேர்வதுபோல, இசையும், நல்ல சிந்தனைகளும் போய்ச் சேரும் என்று திட்டவட்டமாக நம்பினோம்.

உணர்ந்தேன்.

என் கணவர் இதில் சிரத்தையாக ஒத்துழைத்தார். தூங்கும்போது கூட அரை மணிக்கு ஒருதரம் எழுந்து அனிச்சையாக பாடல் ஒலிக்க, அவருக்குப் பழகிப் போய்விட்டது.
**********************
குறிப்பு:   இது 1998-க்கு 2 - 3 வருடங்கள் முன்பு
**********************

இதை வயிற்றுக்குள்ளிருந்த குழந்தை ரசிக்க ஆரம்பித்தாள்! எப்படி என்பதைச் சொல்வதைவிட உணர்ந்துதான் பார்க்க வேண்டும்.

வழக்கமாய்..... பசி இருந்தால் கூட கோர்ட் வேலைகளை முடித்துவிட்டுத்தான் உணவு பற்றி யோசிப்பேன். ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் பசி என்னை உணர்த்தும், படுத்தும். இதை பெண்கள் உணர்ந்திருப்பார்கள்.

அதேபோல நம் மனோநிலையும் இதில் முக்கியம்.

நம்மை உணர வைக்கும்.

சந்தோஷமாய் இருக்கும்போது முகம், மலர்ந்து தெரிவது போல, குழந்தை மகிழ்ச்சியாய் உள்ளே இருப்பதை நம் மனோநிலையின் பரவசம் உணர்த்தும். 

நிஜம்.

அடுத்த கட்டம் போனேன். அதற்குக் காரணம் இருந்தது. நம் தேசம், போராடி சுதந்திரம் பெற்ற தேசம். ஆனால் நம்மவர்களுக்கு இருக்கும் சுதந்திர உணர்வு போதாது என்பது என் தாழ்மையான கருத்து.

"இன்டிபென்டன்ஸ் டே"- படத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்குவதைப் பார்த்து கைதட்டும் நம்மவர்கள், நம் நாட்டுச் சுதந்திர தினத்தன்றுகூட அந்த உணர்வு மறந்து இருப்பது வேதனையில்லையா?
தீர்மானித்தேன்.

அடுத்த தலைமுறைக்கும் அந்த உணர்வை ஊட்ட வேண்டியது மிக முக்கியம்.

எனவேதான், தனியே இருக்கும் சமயங்களில் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவேன்.

கதை சொல்லுவேன்.

திருப்பூர் குமரன் கதை, வாஞ்சிநாதன், வ.உ.சி., சுப்ரமணிய பாரதியார் கதை, இதையெல்லாம் சொல்வேன்.

தலையைக் குனிந்து வயிற்றைப் பார்த்து, மானசீகமாகக் குழந்தையிடம் பேசுவேன்.

கணவர்கூட வயிற்றில் வாய்வைத்துப் பேசுவார். குழந்தையை அழைப்பார்.

உங்களால் நம்புவது கடினம். ஆனால் குழந்தை நகர்வாள். உள்ளே மாறுபட்ட அசைவு இருக்கும். அழைப்புக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்.

இதை நீங்களும் முயன்று, உணர்ந்து பார்க்கலாம்.

என் பெற்றோர் எத்தனையோ நல்லது செய்திருக்கிறார்கள். நான் என் உயரத்தை அடைந்திருக்கிறேன். நாளை என் குழந்தை இன்னும் சிறப்பாக நல்ல இந்திய பிரஜையாக வரவேண்டும். அதுதான் என் விருப்பம். அதற்கே இத்தனை முயற்சிகளும்." சொல்லி முடித்தார் சுமதி.

குழந்தைக்கு "சிம்மாசனா" என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். 'சிம்மு'- என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். பளிச்சென்று ஆயிரம் வாட் பல்புபோல அழகாய்ச் சிரிக்கிறது குழந்தை.

கணவர் கோபியிடம் கேட்கிறோம்.

பதில் வருகிறது.

"என் குழந்தை என்பதற்காகச் சொல்லவில்லை. எங்கள் முயற்சி நிச்சயம் பலித்திருக்கிறது.

ஒரு வயதாகிறது. குழந்தை அத்தனை அறிவுபூர்வமாய் வெளிப்படுகிறாள். சொல்வதை மகா நுணுக்கமாய்ப் புரிந்து கொள்கிறாள்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பூஜை அறைக்குச் சென்று விடுகிறாள். தேசியக் கொடி, ஆஞ்சநேயர் படம் பார்த்துக் கும்பிடுகிறாள்.

வழியில் சிறு காகித கிழிசல் இருந்தால்கூட உடனே எடுத்துவிடுவாள். நம் கையிலோ, தானாகவோ போய் குப்பைத் தொட்டியிலே போட்டுவிடுகிறாள்.

இத்தனை கேஸ் கட்டுகள் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கிறதே, தொட்டுக் கலைப்பதில்லை. டிஸிப்ளின். அம்மா அவளுக்கென்று செய்து கொடுத்திருக்கும் சிறுசிறு கேஸ் கட்டுகளை (ஐஸ்கிரீம் கம்பெனி, லாலிபாப் கம்பெனி, சில்ட்ரன் Vs சிம்மு) மட்டும் எடு்த்துக் கொண்டு சந்தோஷப்படுவாள்.

மெஹந்தியாகட்டும், மடோனா, ரிக்கி மார்ட்டின் ஆகட்டும் கேட்டதும் அவளிடம் ஒரு துள்ளல் வரும். கால்கள் நடனம் ஆடும். கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டால் பெரிய மனுஷி மாதிரி ரசித்துக் கேட்பாள். 

நிறைய சொல்லலாம்.

ஆனால் நாங்கள் அசந்து போனது இரண்டு சம்பவங்களில் மட்டுமே.

ஒன்று-

என் உறவுப் பெண், சிம்முவை அழைத்து அழைத்து ஓய்ந்து விட்டாள். அதே உறவுப் பெண் எங்கள் எல்லோர் வேண்டுகோளுக்காகவும் பாடத் துவங்கியதும், சிம்மு போய் அவள் மடியில் உட்கார்ந்தாள்!

இரண்டு-

சமீபத்தில் 'ஏஸியா நெட்' டெலிவிஷனில் ஒரு மலையாளப் படம்! பெயர் 'சர்க்கம்'!

அதன் கிளைமாக்ஸ் ரொம்ப உருக்கமானது. கர்நாடக சங்கீதம் பாடல் பாடப்பட்டு ஒரு காரக்டரின் முடங்கிப்போன கைகளுக்கு அசைவு வரும்! எல்லோரும் அந்தக் காட்சியில் உறைந்து போயிருக்க... திரும்பி எதேச்சையாகப் பார்த்தோம்.

சிம்முவின் விழிகளில் கண்ணீர். உடலில் அந்தப் பரவசம்! நெகிழ்ச்சி! கடவுளே வரம் செய்தீர், நன்றி."

                                                                 ***-- நன்றி ----- எஸ்.பி.எஸ்  -  குங்குமம்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்தச் செய்தி 1998-ல் குங்குமம் இதழில் படித்தது. இச்செய்தியின் உந்துதலால் நான் அறிந்து கொண்டவற்றின் வெளிப்பாடுதான் "நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும்" என்ற பதிவில் கொடுத்திருப்பது. அதற்கான இணைப்பு இங்கே. தொடர்புடைய மேலும் சில விசயங்கள் நான் படித்தது அடுத்த பதிவுகளில் கொடுக்க இருக்கிறேன்.

நன்மக்களை விரும்பி, தம்பதியர் சில முயற்சிகளை எடுத்துக்கொள்ளலாம். தங்கள் சூழ்நிலைக்கும் மனோபாவங்களுக்கும் ஏற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். நம் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும். 

*************************************************************************

இயற்கையை நேசிப்போம்
அன்புடன்
விவசாயி.
-------------------------
 

11.8.14

உச்சஸ்தாயிகளுக்கு அப்பால்

படித்ததில் பிடித்தது - 01

பழைய, புதிய பக்தி சினிமாப் படங்களில் பொதுவாகக் காணக் கிடைக்கும் விஷயம் இது. இறைவன் அல்லது இறைவியின் அருள் வேண்டுகின்ற பக்தன் அல்லது பக்தை, ஒரு பக்திப் பாடலைப் பரவசத்துடன் பாட ஆரம்பிப்பார்.

பல்லவிக்குக் கடவுள் வர மாட்டார்.
அனுபல்லவிக்கும் வர மாட்டார்.

சரணம், (நாலைந்து பாராக்கள்) பாடிய பிறகு கூட வருவதில்லை. பொறுமையிழந்த பக்தர் அல்லது பக்தை பாடலின் கடைசி வரியை உச்ச ஸ்தாயில் பாடி மூர்ச்சை போட்ட பிறகுதான் பிரசன்னமாவார் கடவுள். 

உண்மையிலேயே அனுக்கிரகம் தருவதற்காகப் பிரசன்னமாகிறாரா அல்லது கர்ணகரூரமான உச்ச ஸ்தாயிக் குரலை எதிர்கொள்ள முடியாமல் அதை நிறுத்துவதற்காக நேரே வந்துவிடுகிறாரா என்பது பட்டிமன்றத் தலைப்புக்குரிய விஷயம்.

உச்சஸ்தாயியில் இன்னொரு வகை :-

இதுவும் சினிமா மற்றும் சீரியல்களின் உபயம்தான். கணவனை எதிர்த்துப் பேசும் மனைவி, காதலனை எதிர்த்துப் பேசும் காதலி, ஆசிரியரை எதிர்த்துப் பேசும் மாணவி, எஜமானியை எதிர்த்து வாயாடும் வேலைக்காரி ஆகிய சகலரும், தத்தமது குரலை உயர்த்திக் கொண்டே உச்சஸ்தாயிக்குப் போகும்போது பளார் என்று கன்னத்தில் அறை வாங்கி, அதன் பின்னரே வாயை மூடுகிறார்.

ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்பதைக் கண்டிக்க வேண்டியது தான் என்பது ஒருபுறம் இருக்க ......

உச்ச ஸ்தாயிக்குப் போகும் குரல் ஓர் அறை வாங்கிய பிறகு தான் கீழ் ஸ்தாயிக்கு வருவதோ அல்லது மௌனம் அனுஷ்டுப்பதோ சாத்தியப்படுகிறது ............ நமது ஊடகங்களைப் பொறுத்தவரையில்.

நிற்க.....

சினிமாக்களிளும், சீரியல்களிலும் மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் இந்த உச்ச ஸ்தாயி விவகாரம் தலைகாட்டத்தான் செய்கிறது. 

ஆணவம், அலட்சியம், எதையும் தள்ளிப்போடும் மனப்பான்மை மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் பலதரப்பட்ட உச்ச ஸ்தாயி நிலவரங்களைச் சந்திக்கும் நிலைக்கு நம்மில் பலரை ஆட்படுத்தி விடுகின்றன.

வீட்டில் மளிகைச் சாமான்கள் தீர்ந்து போவதிலிருந்து, 
மின்சாதனங்கள் பழுது பார்ப்பது வரை, 
பிரச்சினையின் தொடக்கத்திலேயே கவனிக்க மறந்து அல்லது அலட்சியப்படுத்தி, 
உச்சபட்ச நெருக்கடி வந்த பின்பு தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்ற குடும்பத் தலைவர்களின் போக்கினால் ஒன்றுக்குப் பத்தாகப் பணவிரயமும், கால விரயமும் ஏற்படுவது மட்டுமன்றி மனஅழுத்தமும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. 

சாதாரணத் தலைவலியோ, உடம்பில் கட்டியோ ஏற்படும் போது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாள்களைக் கடத்துவதும், பிரச்சினை அதிகரிக்கும்போது நரம்புக்கோளாறோ, புற்றுநோய்க் கட்டியோ என்று மன அலைக்கழிப்புக்கு உள்ளாகி, ஆயிரக்கணக்கில் பணம் செலவழிப்பதும், நாள்கணக்கில் நர்ஸிங்ஹோமில் தவம் இருப்பதும் ஒருபுறம் நடைபெறத்தான் செய்கிறது.

பெரிய தொழில் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், ஊதிய உயர்வு, போனஸ் போன்ற விஷயங்களுக்காகத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் கொடுக்கும் குறைந்தபட்சக் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போக, பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஸ்டிரைக், உற்பத்தி நிறுத்தம் என்று விசுவரூபம் எடுக்க, அப்போதும் பிரச்சினையின் முழு வீரியத்தைப் புரிந்து கொள்ளாமல், தொழில்சங்கத் தலைவர்களிடையேயும், தொழிலாளர்கள் மத்தியிலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள நிர்வாகம் முயன்று பார்க்க, போராட்டம் தீவிரமடைந்து, பலத்த நஷ்டத்திற்குப் பிறகே சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

தொழிலாளர் தரப்பு நியாயமான – கட்டுப்படியாகக் கூடிய கோரிக்கைகளை முன்வைப்பதும், அவற்றை நிர்வாகத் தரப்பு விரைவாகப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு சகஜமான சூழ்நிலையை ஏற்படுத்துவதும் மிகவும் அரிதான விஷயமாகி வருகின்றன. அரசியல் கட்சி, தொழிற்சங்கம், தொழில் நிறுவன நிர்வாகம் மற்றும் அறக்கட்டளைகள் போன்றவற்றில் தலைமைப்பதவி அல்லது அதற்கு அடுத்த நிலையிலான பதவிகள் போன்றவற்றிற்காகப் பல்வேறு தரப்பினர் ஆசையும் பிரயாசையும் படும்போது, தலைமையினால் முதலில் அது அலட்சியப்படுத்தப்படுவதும், நாளடைவில் உரிமைப் போர்களினால் விரிசல் ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகம் இரண்டு அணிகளாகப் பிரிந்து அவ்வமைப்புகளையே பலவீனப்படுத்துவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள்தாமே.....?

காட்சி தருவதற்கு உச்ச ஸ்தாயி வரை கடவுள் காத்திருக்கலாம்.

கன்னத்தில் அறைவதற்கு உச்ச ஸ்தாயி வரை கணவனோ, காதலனோ காத்திருக்கலாம்......

ஆனால்......

கண்ணெதிரே முளைவிடும் சிறு பிரச்சினைகள் உச்ச ஸ்தாயிக்கும் அதற்கு அப்பாலும் வளர்வதற்காக நம்மில் எவரும் காத்திருக்கத் தேவையில்லை. அப்படிக் காத்திருப்பது புத்திசாலித்தனமும் இல்லை. கடவுளை விடவும் சினிமாக் கணவன் அல்லது காதலனைவிடவும் விரைவாக நாம் செயல்பட வேண்டும்.

அப்போதுதான்..........

கடவுள் ஆகாவிட்டாலும் கதாநாயகன்களாக உருவெடுப்போம்..... நிஜ வாழ்க்கையில். 

                                 நன்றி: தினமணி  + (எஸ்.ஸ்ரீதுரை)  


இயற்கையை நேசிப்போம்
 அன்புடன்
விவசாயி

10.8.14

நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும்



நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும்

நல்ல சமுதாயத்திற்கு அது வித்து



இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு நமது வாழ்க்கை துவங்குகிறது?

விதி என்பது எங்கிருந்து வந்தது?
           எப்படித் தொடர்கிறது?


ஒரு கணவன் மனைவி இணையும் பொழுது ஆனந்தத்தின் உச்சியில் அங்கு ஓர் உயிர் ஜனிக்கிறது. அந்த உயிர், அந்தக் குழந்தை நல்ல குழந்தையாக இருக்க வேண்டும், மேன்மையான சந்ததியாக அமைய வேண்டும் என்ற ஆசை எல்லா தம்பதிகளுக்கும் உண்டு தானே.

நம்மிலிருந்து உருவாகும் குழந்தைகள் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும்? நன்மக்களைப் பெறுதல் – ஒரு நல்ல சிந்தனை. இதில் நம்முடைய முயற்சி, பங்களிப்பு என்ன?

ஒரு குழந்தையின் பிறப்பு ரகசியம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயன்றால் இதற்கான வழி புலப்படும்.

விதி என்பதை கடவுள் எழுதுவது இல்லை. அவரவர் விதியை அவரவர் தான் எழுதிக்கொள்கிறோம்.

இரண்டாவது, விதி என்பது நொந்துகொள்ளக்கூடிய விசயமே அல்ல. அது நமது வாழ்க்கைக்கான ஒரு outline. அதைக் கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானித்து செயல்படுவது தான் வாழ்க்கை.

விதி என்பது ஒரு கட்டிடத்தின் அஷ்திவாரம் (Foundation) போன்றது. நம் கண்ணுக்கு புலப்படாத பகுதி. அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட ஒன்று.

அந்த அஷ்திவாரத்தின் நீள - அகல அமைப்புக்கு உட்பட்டு, அதன் தாங்கு திறனையும் கருத்தில் கொண்டு, மேலே உள்ள கட்டிடத்தை (Supper structure) நிர்மானிப்பது நமது செயல் தான். அதை நமது சௌகர்யப்படி செய்யலாம். அது நமது திறமை. அது தான் வாழ்க்கை.

முன்னதாகவே உருவாக்கப்பட்டுவிட்ட அஷ்திவாரத்தின்(விதியின்) தன்மை அமைப்புகளை அறிந்து கொள்ளும் முயற்சிதான், ஜாதகத்தைக் கொண்டு நம் வாழ்வியலின் அடிப்படையை அறிந்து கொள்ளும் முயற்சி.

நாம் பிறந்து விட்டோம். நமது விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதை அனுசரித்து நாம் வாழ முற்படுவது சிறப்பு.

மனிதன் என்பவன் உடல் அல்ல. ஆன்மா. வாழ்க்கைப் பயணத்தை நடத்து வதற்கு ஆன்மாவின் வாகனம் இந்த உடல்.

“If there is an action; Equal and opposite reaction is also there.” இது விஞ்ஞானம் வரையறுத்திருக்கிற பௌதீக விதி.

இதே விதியைத்தான், ஒரு மனிதன் முற்பிறவியில் செய்த செயல்களின் (வினைகளின்) விளைவுகளைத் (reaction) தொகுக்கும் பொழுது உருவாவதே இப்பிறவிக்கான விதி என்று நம் முன்னோர்கள் ஆன்ம நிலையில் வரையறுத்தார்கள்.

ஒரு ஆன்மாவின் ஒரு பிறவி முடிவடையும் பொழுது அடுத்த பிறவிக்கான விதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த விதிப்பாட்டை அந்த ஆன்மா சந்திக்க வேண்டுமானால் அதன் அடுத்த பிறப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமைய வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு ஆன்மா ஒரு குழந்தையாக பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் என்று ஒரு குறிப்பை எழுதுகிறோம். ஒரு சிறந்த, தேர்ந்த, உண்மையான ஜோதிடரால் இந்த ஜாதகக் குறிப்பைக் கொண்டு அந்த குழந்தையின் வாழ்க்கைப் போக்கு, ஏற்றத்தாழ்வுகள், குணஇயல்புகள், அதன் மேன்மை கீழ்மைகளை கோடிகாட்ட;  ஒரு தெளிவான outline-ஐ வரையறுக்க முடியும்.

அதாவது, ஒரு குழந்தை மேம்பட்ட குண இயல்புகளைக் கொண்டதா, உன்னதமான வழ்க்கை, சிறந்த லட்சியத்தை அடையும் செயல்திறன் உடையதா போன்றவற்றை அக்குழந்தை பிறக்கும் நேரம் தீர்மானிக்கிறது.

பிறக்கும் நேரம் என்பது கருவமையும் நேரத்தைப் பொறுத்தது. அதாவது, ஒரு ஆன்மாவின் விதிப்பாட்டை கடவுள் நின்று கண்காணித்து நிகழ்த்துவதில்லை. காலத்தின் கையில் பொருப்புகளை ஒப்படைத்து விடுகிறார்.

ஒரு ஆன்மா சந்திக்க வேண்டிய விதியை சந்திப்பதற்கு இன்ன நேரத்தில் கரு அமைந்தால், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்து தனது விதியை எதிர்க்கொள்ளும் என்பது காலச் சுழற்சியின் சூட்சுமம்.

இந்த கரு அமையும் அல்லது ஒரு ஆன்மா கருவில் உட்புக வேண்டிய நேரம், கருவில் ஒடுங்க வேண்டிய நேரம் இறை சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது. விதியின் மற்ற அம்சங்களை காலம் பார்த்துக்கொள்கிறது.

ஒவ்வொரு ஆத்மாவும் தனது விதிப்பாட்டுக்கு ஏற்ற நேரத்திற்காக காத்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எங்கு யாரால் ஒரு கரு உருவாக்கப்படுகிறதோ அந்தக் கருவில் தன்னை ஒடுக்கிக்கொண்டு வளர்ந்து குழந்தையாகப் பிறந்து அவர்களோடு வாழ்கிறது.

ஒரு தாயும் தந்தையும் கலந்து ஒரு கருவை உருவாக்கும் பொழுது, அந்த நேரம் எந்த ஆன்மா தனது விதிப்பாட்டுக்கு உரியது என்று காத்திருக்கிறதோ அந்த ஆன்மா இத்தம்பதியர் உருவாக்கிய கருவில் ஒடுங்கி வளர்கிறது. அந்த ஆன்மாவின் விதி அம்சத்தை ஒட்டி நல்ல குழந்தையாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ பிறந்து நம்மோடு வளர்கிறது.

நல்ல குழந்தை வேண்டும் என்பது நமது ஆசை. அதை அடைவதற்கு சரியான வழி என்ன?

நல்ல ஆன்மாக்களை வரவேற்பது. அதாவது தம்பதியர் உறவிற்கு உன்னதமான நேரத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த நேரத்தில் உருவாகும் கரு உன்னதமான ஆன்மாக்களை ஈர்க்கிறது.

இந்த மேலான, சிறந்த குழந்தை வேண்டும் என்ற திட்டமிட்ட தெளிவான முயற்சி கர்ப்ப தானம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது.

இது ஒரு பக்குவப்பட்ட அணுகுமுறை. அவ்வாறு குறிப்பிட்ட சிறந்த நேரத்திற்காக ஒரு முனைப்போடு சக்தி விரையம் இன்றி காத்திருத்தல் தான் தவம் என்று சிறப்பிக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட சக்தி ஆரோக்கியமான, வலுவான, தெளிவான கரு அமைவதற்கு ஏதுவாகிறது.

அந்த உன்னதமான கருவை நோக்கி சிறந்த ஆன்மாக்கள்; அதாவது மேலான விதிப்பாடுகளை உடைய ஆன்மாக்கள் ஈர்க்கப்படுகிறது. அவை நல்ல குழந்தைகளாக நம்மோடு தவழ்கிறது. இதுதான் தவமிருந்து பெற்ற பிள்ளை.

ஏதோ ஒரு நேரத்தில் கலந்து ஏதோ ஒரு நேரத்தில் கரு அமைந்து பிறக்கும் குழந்தை ஏதோ ஒரு விதமாகத்தான் அமையும். அதன் குற்றம் குறைகளுக்காக அந்த குழந்தையை பழிப்பதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?

இந்த இரு வேறு நிலைப்பாடுகளில் பிறக்கும் குழந்தைகளை தவப் புதல்வர்கள் என்றும் காமப் புதல்வர்கள் என்றும் பிரிக்கிறார்கள். நமக்கு எந்தச் சந்ததி வேண்டும்?

இன்று நாம் காண்பது காமப்புதல்வர்கள் மிகுதியான சமுதாயம். நுகர்வுக் கலாச்சாரத்தில் காமமும் நுகர்வுப் பொருளாக்கப்பட்டு காண்டம் விளம்பரத்தில் ஜொலிக்கிறது. அது வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க வேண்டிய விசயம். இருக்கட்டும்.

தாய்-தந்தையின் சுக்கில-சுரோணிதம் வலுவுள்ளதாக இருப்பின் 
                     குழந்தையின் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.

குழந்தையின் மனம், சிந்தனை என்பது
        அந்த ஆன்மாவின் விதி அம்சங்களாலும்,

        கர்ப்பகாலத்தில் தாயின் மனோ நிலைகளாலும்,

        பிறந்த பின் சமுதாய சூழல்களாலும் அமைவது.

ஒரு மனிதனின் - ஒரு குழந்தையின் உடலும் மனமும் ஆரோக்கியமான தாக, தெளிவும் திடமும் உள்ளதாக அமைவது சிறப்பு.

இவை நம்மிலிருந்து உருவாகும் குழந்தைக்குக் கிடைக்கப்பெற நாம் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்?

  •  ==*==>  நமது ஜீவசக்தியை (சுக்கில – சுரோணிதத்தை) வீணாக்காமல், செலவழிக்காமல் இருந்தால் நமது ஜீவசக்தி (சுக்கில-சுரோணிதம்) வீரியமுள்ளதாக மாறும். இந்த வீரியம் பிறக்கும் குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மேலும் நாம் குறித்த நல்ல நேரத்தில் முதல் கலவியிலேயே கரு அமைய நல்ல வாய்ப்பையும் உருவாக்கித்தரும்.

  • ==*==> நம்மில் பிறக்கும் குழந்தைக்கு தெளிவான மனமும் நற்சிந்தனையும் மேலான செயல் திறனும் அமையப்பெற:
    1. நல்ல விதிப்பாட்டை உரிய ஆன்மாக்களை வரவேற்பது. அதாவது கரு அமையும் உறவிற்காக சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்காக பொறுப்போடு காத்திருந்து அந்த நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல ஆன்மாக்கள் நம்மை நோக்கி வர ஏதுவான சூழ்நிலையை உருவாக்குதல் ஒரு நல்ல முயற்சி.

    2. கர்ப்ப காலத்தில் அழுகைக் காட்சிகள் நிறைந்த TV தொடர்களை பார்க்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை அழுமூஞ்சியாக இருக்கிறது என்பது ஆய்வுத்தகவல்.

    3.  கர்ப்ப காலத்தில் வன்முறைக் காட்சிகள், வக்கிரச் செயல்கள், திடுக்கிடும்படியான, பயப்படும்படியான சம்பவங்கள் போன்றவற்றை TV-யிலோ, சினிமாவிலோ, அக்கம் பக்கத்திலோ காண நேரும்பொழுது அதன் பதிவுகள் குழந்தையின் மனதிலும் பதிகிறது.

    4.  பின்னர் குழந்தைகள் வளரும் பொழுது அவர்களிடமிருந்து அடாவடித்தனமாக, அழுமூஞ்சியாக, பயந்த சுபாவமாக இவை வெளிப்படுகிறது.

    5.  அதனாலேயே நமது சான்றோர்கள் இது போன்ற சம்பவங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

    6.  நல்ல விசயங்களையே பேசி, சிந்தித்து, நல்லவற்றைப் படித்து, கேட்டு நல்ல குழந்தைக்காகத் தவமிருப்போம். கரு அமைவதற்கும், கரு சிறந்த முறையில் வளர்வதற்கும் தவமிருப்போம்.

  • ==*==>  இவை இரண்டும் நேர்படின் சமுதாய சூழ்நிலையைத் தாங்கி தன்னைத் தகவமைத்துக்கொள்ளும், தன்னை மேம்படுத்திக் கொள்ளும், தன் சுயத்தை இழக்காது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆற்றலோடு அக்குழந்தை வடிவெடுக்கும்.
இது ஒரு ஆன்மாவின் நீண்ட நெடிய பயணம்.

நல்லதை எண்ணுவோம், நல்ல முயற்சிகளில் ஈடுபடுவோம். நல்ல ஆன்மாக்கள் நம்மோடு வாழட்டும். வாழ்க வளமுடன் வையகம் தழைத்திட.


முயற்சிகள் தவறலாம்;      முயற்சிக்கத் தவறாதே       
                                                              – ஒரு நல்ல சிந்தனை.      


மேலும் சிந்தனைக்கு:

1. நன்மக்களைப் பெறுதல் - சுவாமி சித்பவானந்தர், ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்.

2. சாந்தி முகூர்த்தம் - கோசலன் - கற்பகம் புத்தகாலயம் - சென்னை

3. உயர்ந்த எண்ணங்களால் ஆன்ம நிலையிலும், வாழ்வியல் நிலையிலும் நல்ல பெற்றோராக நம்மை தயார்படுத்திக்கொள்ள
                                                                                   --  சுகி.சிவம் சொற்பொழிவுகள்

                               

இயற்கையை நேசிப்போம்
அன்புடன்
விவசாயி


----------------------------