விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

3.11.14

வாழ்க்கையின் உயரம்



கேட்டதும் படித்ததும் - 03

வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன?

சுகி.சிவம் சொற்பொழிவிலிருந்து

ஒரு சின்ன உருவகக்கதை.

நம்ம திருவள்ளுவர் ஒரு பள்ளிக்கூடத்தின் இலக்கிய மன்ற விழாவுக்கு போயிருக்கிறார். அங்கே அவர் பேசும் பொழுது மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேக்கறார். தம்பி தாமரைப்பூவின் உயரம் என்ன? ஒரு பையனைக் கேட்டார்.

அந்தப் பையன் பக்கத்தில இருந்த பையனப் பார்த்தான். அதாவது, அந்தக் கேள்விய அவங்கிட்ட கொடுத்திட்டான். அவனுக்கு pass பன்னியாச்சு அப்படின்னு அர்த்தம். பக்கத்தில் இருந்த பையன் நேரா திருவள்ளுவரையே பார்த்தான். அவர் கேள்வியைப் பொட்டலங்கட்டி அவர்கிட்டயே கொடுத்தாச்சு. உன் கேள்விய நீயே வெச்சுக்கையா அப்படீன்னு அவரையே நேராகப் பார்த்தான்.

திருவள்ளுவர் நொந்துபோயிட்டார். ஏம்பா ஒருத்தருக்கும் தெரியாதான்னு கேட்டார். பார்த்தான் ஒரு பையன் "டேய் சொல்லாட்டி தாடி உடாதுடா " அப்படீன்னுட்டு எந்திரிச்சான். தாமரைப் பூவின் உயரம் ரெண்டரை அடின்னான். திருவள்ளுவர், ஏன் மூனரை அடி இருக்காதான்னார். வெச்சுக்கோங்க. அதுதான் உங்களுக்கே தெரியுதே அப்பரம் ஏன் எங்களைக் கேட்கறீங்கன்னுட்டு உட்காந்திட்டான். என்னடா ஒருத்தர்கூட சொல்லமாட்டீங்கறாங்களேன்னு ரொம்ப வேதனைப்பட்டார்.

கடைசியா ஒரு பையன் எந்திரிச்சான், ஐயா உங்களுடைய கேள்வி தவறு அப்படீன்னான். திருவள்ளுவருக்கு சந்தோசம். ஏன்னா, அவன் உண்மையை நெருங்கிட்டான். உங்கள் கேள்வி தவறு. எப்படிச் சொல்ற அப்படீன்னார்.

தாமரைக்குன்னு என்னங்கையா உயரம் இருக்கு. அதுக்கு ஒன்னே ஒன்னு தெரியும். என்ன? தண்ணிக்கு மேல நிக்கனும்னு தெரியும். அவ்வளவுதான். தண்ணீர் 2-அடி இருந்தா அதுக்கு மேல, தண்ணீர் 5-அடி போனா அதுக்கும் மேல போயிடும். தண்ணீர் 3-அடிக்கு வந்தா அதுக்கு மேல நிற்கும். தாமரைக்குன்னு உயரம் கிடையாது. இப்படி வேணும்னா சொல்லலாம்; அதாவது தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம்.

சொல்லீட்டு உட்காரப் போனான், நில்லு நில்லு அடுத்த கேள்வின்னார். தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம். தெரிஞ்சுபோச்சில்லையா? சரி.

வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்னன்னார். வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன? இதுக்கு என்ன பதில் சொல்றது. 5-அடி, 10-அடி அப்படியா? இது பதில் இல்லை. வாழக்கையில் உன்னுடைய உயரம் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உயரம் இருக்கு, உச்சம் இருக்கு, சிகரம் இருக்கு. அவங்க அந்த லெவலை reach பண்றதுதான் வாழ்க்கையினுடைய torget. எல்லாத்திலையுமே இருக்கு. அதாவது entry point-னு ஒன்னு இருக்கு exit point-னு ஒன்னு இருக்கு.Entry point கீழதான் இருக்கும். நல்ல உச்சத்துக்கு போயிட்டு அப்படியே exit point வழியா போயிடனும். அதுதான் வாழ்க்கையை வாழுகிற முறை.

இப்ப உச்சம்னா என்னாங்கரதுக்கு ஒரு உதாரணம் சொல்றம்பாருங்க. ஒரு படத்துல ஒருத்தர் நடிக்கனும்னு நினைக்கறாரு. சான்ஸ் கேட்டு டைரக்டர், புரட்யூசர் வீடுவீடா ஏறி எறங்கி எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க சான்ஸ் குடுங்க அப்படீங்கறாரு. உச்சத்துல இருக்கராருன்னு அர்த்தமா?

அவரு கீழ இருக்கராரு. நடிகரா உள்ள வர்ராரு. திடீர்னு பெரிய நடிகராகீட்டாரு. அவரு படம் அப்படி ஓட ஆரம்பிக்குது. உடனே என்ன பண்றாரு? ஒரு டைரக்டர் அவரு வீட்ல நேரா போய் உக்காந்துக்கிட்டு அண்ணே எப்படியாவது நம்ம படத்துக்கு ஒரு கால்ஷீட் குடுக்கனும், நம்ம படத்துக்கு டேட் குடுக்கனும், நடிக்க வரனும் அப்படீங்கறார்.

அப்படியே யோசிச்சிட்டு அவர் சொல்றார்..... ம்..ம்..ம்.... 20 கோடி குடுப்பீங்களா - 20 கோடி. 20-கோடீன்னு அவர் கேக்கறார்ன்னா என்னான்னு புரிஞ்சுதா? தன்னுடைய சம்பளம் என்ன அப்படீங்கரத இப்ப அவரே fix-பன்னி கேக்கறார். இது பொருளாதாரரீதியான உலகியல் வெற்றி.

நீங்க ஒரு துறையில மேல வந்திருக்கறீங்கங்கறதுக்கு அடையாளம், ஒரு சின்ன இலக்கணம், பொருள் சம்பந்தப்பட்ட இலக்கணம் ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா?
என்ன?
என் சம்பளம் என்ன என்று இன்னொருவர் முடிவு செய்கிறவரை நான் உயரவில்லை என்று பொருள். என் சம்பளம் இவ்வளவு என்பதை என்றைக்கு நானே முடிவு செய்கிறேனோ அன்றைக்கு என் துறையில் நான் உச்சத்தில் இருக்கிறேன் என்று பொருள்.

இது ஒரு இலக்கணம். அது 5 ரூபாயாக இருக்கலாம், 5 கோடியாக இருக்கலாம், 50 கோடியாக இருக்கலாம். அது பத்தி கவலை இல்லை. என் சம்பளம் என்ன என்பதை நானே முடிவு செய்கிறேன் என்கிறபோது என் தொழிலில் நான் உச்சத்தில் இருக்கிறேன். இதுதான் இலக்கணம்.

இது பொருள் சம்பந்தப்பட்டது. இதத்தாண்டி எத்தனையோ இருக்கு. இப்ப எல்லாத்திலயுமே பொருளை அளவுகோளா கொள்ள முடியுமா என்ன?

இப்ப நான் சொற்பொழிவாளர். இப்ப என்னைக் கூப்பிடறாங்க. நான் அப்படியே பாத்துட்டு, பேச வர்றீங்களா அப்படீன்னு கூப்பிட்ட உடனே ஒரு கோடி, ஒரு கோடி அப்படீன்னா.... உடனே என்ன சொல்லுவாங்க? ஒரு கோடீல போயி உக்காருங்க. நீங்க ஒரு கோடிதான வேணும்ணு கேட்டீங்க... இந்தக் கோடி வேணுமா அந்தக் கோடி வேணுமா பாத்து போயி உக்காருங்கன்னுட்ருவாங்க. முடிஞ்சு போச்சு கதை.

அப்ப எனக்கு வந்து உச்சமே கிடையாதா? சொற்பொழிவாளனா உள்ள நொழஞ்சாலும், எனக்கு உச்சமே கிடையாதா? யாரு சொன்னா? என்றைக்கு நான் என்ன பேசுகிறேன் என்பதைப்பறிறிக் கேட்பதற்கு ஒரு கோடி காதுகள் காத்திருக்கின்றதோ அன்றைக்கு நான் என்னுடைய துறையில் உச்சத்தில் இருக்கிறேன் என்று பொருள்.  

நான் என்ன சொல்லுகிறேன் என்பதைப் பற்றி என்றைக்கு ஒரு கோடி காதுகள் கவலைப்படுகின்றனவோ அன்றைக்கு இந்தத் தொழில், இந்தத் துறை, இந்த நிலப்பரப்பில் நான் உச்சத்துக்குச் சென்றிருக்கிறேன் என்பது பொருள். புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் தன் வாழ்வின் சிகரத்தைத் தொடாமல் சாகக்கூடாது. நாம் எந்தத் துறையில் நுழைந்திருக்கிறோமோ அந்தத் துறையின் உச்சத்தைச் சென்றடையாமல் நாம் அதை விட்டு வெளியேறக்கூடாது.

இந்த எண்ணம் மனதுல இருக்கனும். நாம் எந்தத் துறையில் போயிருக்கிறோமோ அதனுடைய உச்சத்தில் சென்றடைய வேண்டியது நம்முடைய கட்டாயம்.

இதை திருவள்ளுவர் கேக்கறார் சார். நம்ம திருவள்ளுவர் இப்படி ஒரு Motivational thinker, அவர் ஒரு International reputed personality அப்படீங்கறது நமக்கு தெரியாது.

நாம திருவள்ளுவரை 2 மார்க்குக்குப் போட்டே கொன்னுட்டம். திருக்குறள்ல என்ன தேடனும்னா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தேடனுமே ஒழிய, வேற என்னத்தத் தேடினோம் திருக்குறள்ல போயி.

ஒரு International leadership-க்கு வேண்டிய Potency என்ன அப்படீங்கரத, Leadership qualities என்னங்கரத திருக்குறள்ல இருந்து You can learn. அது என்ன சொல்றாரு?

இதாபாருங்க, எவ்வளவு சின்ன வார்த்த பாருங்க. தம்பி தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம். தெரிஞ்சுபோச்சு. வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன? அப்படீன்னு கேட்டார். அவனுக்கு சொல்லத் தெரியல, உட்காந்திட்டான்.

திருவள்ளுவர், அப்பரம் அவனுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பிச்சார். தம்பி தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், வாழ்க்கையில் நம்முடைய உயரம் நம்முடைய எண்ணத்தினுடைய உயரம். எண்ணங்கள் உயர உயர வாழ்க்கை உயருகிறது. எண்ணங்கள் தாழத்தாழ வாழ்க்கை தாழுகிறது. இந்த இயற்கை நியதியை கடவுளால் கூட மாற்ற முடியாது.

ஒரு திருக்குறள் நீங்க படிச்சதுதான்,

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

அப்துல்கலாம கேட்டாங்க, உங்களுடைய வெற்றியினுடைய பாதிப்பு, இளம் வயதிலிருந்து ஏற்படுத்தியதில் முக்கிய கருத்து எது?  இந்தக் குறள் "உள்ளத்து அனையது உயர்வு ". 

நம்முடைய உள்ளத்தைப் பொருத்துத்தான் நம்முடைய வாழ்க்கையில உயர்வு.

உள்ளம் வளராதவர்கள், எண்ணம் வளராதவர்கள் தலைகீழாக நின்றாலும் உயர்ந்த இடத்தை வாழக்கையில் அடைய முடியாது. செயற்கையா பெரிய மனுசனாக் காட்டலாம். ஆனா என்னன்னா காலிபலூன், ஊதுன பலூன் வெடிக்கற மாதிரி ஒன்னுமில்லாம போயிடுவாங்க.

But எண்ணத்தில் உயர்ந்தவர்கள், அவர்களைக் கடவுளே கூட தடுத்து நிறுத்தினாலும் வாழ்க்கையில் மேல வந்துருவாங்க.

---------------------------------------------
சுகி.சிவம் சொற்பொழிவுகள் சில - பகுதி - 01
01  கனவு மெய்பட வேண்டும்
02  சவாலை சமாளி

-----------------------------------------------

இயற்கையை நேசிப்போம்
அன்புடன்
விவசாயி.