விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

11.8.14

உச்சஸ்தாயிகளுக்கு அப்பால்

படித்ததில் பிடித்தது - 01

பழைய, புதிய பக்தி சினிமாப் படங்களில் பொதுவாகக் காணக் கிடைக்கும் விஷயம் இது. இறைவன் அல்லது இறைவியின் அருள் வேண்டுகின்ற பக்தன் அல்லது பக்தை, ஒரு பக்திப் பாடலைப் பரவசத்துடன் பாட ஆரம்பிப்பார்.

பல்லவிக்குக் கடவுள் வர மாட்டார்.
அனுபல்லவிக்கும் வர மாட்டார்.

சரணம், (நாலைந்து பாராக்கள்) பாடிய பிறகு கூட வருவதில்லை. பொறுமையிழந்த பக்தர் அல்லது பக்தை பாடலின் கடைசி வரியை உச்ச ஸ்தாயில் பாடி மூர்ச்சை போட்ட பிறகுதான் பிரசன்னமாவார் கடவுள். 

உண்மையிலேயே அனுக்கிரகம் தருவதற்காகப் பிரசன்னமாகிறாரா அல்லது கர்ணகரூரமான உச்ச ஸ்தாயிக் குரலை எதிர்கொள்ள முடியாமல் அதை நிறுத்துவதற்காக நேரே வந்துவிடுகிறாரா என்பது பட்டிமன்றத் தலைப்புக்குரிய விஷயம்.

உச்சஸ்தாயியில் இன்னொரு வகை :-

இதுவும் சினிமா மற்றும் சீரியல்களின் உபயம்தான். கணவனை எதிர்த்துப் பேசும் மனைவி, காதலனை எதிர்த்துப் பேசும் காதலி, ஆசிரியரை எதிர்த்துப் பேசும் மாணவி, எஜமானியை எதிர்த்து வாயாடும் வேலைக்காரி ஆகிய சகலரும், தத்தமது குரலை உயர்த்திக் கொண்டே உச்சஸ்தாயிக்குப் போகும்போது பளார் என்று கன்னத்தில் அறை வாங்கி, அதன் பின்னரே வாயை மூடுகிறார்.

ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்பதைக் கண்டிக்க வேண்டியது தான் என்பது ஒருபுறம் இருக்க ......

உச்ச ஸ்தாயிக்குப் போகும் குரல் ஓர் அறை வாங்கிய பிறகு தான் கீழ் ஸ்தாயிக்கு வருவதோ அல்லது மௌனம் அனுஷ்டுப்பதோ சாத்தியப்படுகிறது ............ நமது ஊடகங்களைப் பொறுத்தவரையில்.

நிற்க.....

சினிமாக்களிளும், சீரியல்களிலும் மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் இந்த உச்ச ஸ்தாயி விவகாரம் தலைகாட்டத்தான் செய்கிறது. 

ஆணவம், அலட்சியம், எதையும் தள்ளிப்போடும் மனப்பான்மை மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் பலதரப்பட்ட உச்ச ஸ்தாயி நிலவரங்களைச் சந்திக்கும் நிலைக்கு நம்மில் பலரை ஆட்படுத்தி விடுகின்றன.

வீட்டில் மளிகைச் சாமான்கள் தீர்ந்து போவதிலிருந்து, 
மின்சாதனங்கள் பழுது பார்ப்பது வரை, 
பிரச்சினையின் தொடக்கத்திலேயே கவனிக்க மறந்து அல்லது அலட்சியப்படுத்தி, 
உச்சபட்ச நெருக்கடி வந்த பின்பு தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது என்ற குடும்பத் தலைவர்களின் போக்கினால் ஒன்றுக்குப் பத்தாகப் பணவிரயமும், கால விரயமும் ஏற்படுவது மட்டுமன்றி மனஅழுத்தமும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. 

சாதாரணத் தலைவலியோ, உடம்பில் கட்டியோ ஏற்படும் போது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாள்களைக் கடத்துவதும், பிரச்சினை அதிகரிக்கும்போது நரம்புக்கோளாறோ, புற்றுநோய்க் கட்டியோ என்று மன அலைக்கழிப்புக்கு உள்ளாகி, ஆயிரக்கணக்கில் பணம் செலவழிப்பதும், நாள்கணக்கில் நர்ஸிங்ஹோமில் தவம் இருப்பதும் ஒருபுறம் நடைபெறத்தான் செய்கிறது.

பெரிய தொழில் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், ஊதிய உயர்வு, போனஸ் போன்ற விஷயங்களுக்காகத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் கொடுக்கும் குறைந்தபட்சக் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போக, பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஸ்டிரைக், உற்பத்தி நிறுத்தம் என்று விசுவரூபம் எடுக்க, அப்போதும் பிரச்சினையின் முழு வீரியத்தைப் புரிந்து கொள்ளாமல், தொழில்சங்கத் தலைவர்களிடையேயும், தொழிலாளர்கள் மத்தியிலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள நிர்வாகம் முயன்று பார்க்க, போராட்டம் தீவிரமடைந்து, பலத்த நஷ்டத்திற்குப் பிறகே சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. 

தொழிலாளர் தரப்பு நியாயமான – கட்டுப்படியாகக் கூடிய கோரிக்கைகளை முன்வைப்பதும், அவற்றை நிர்வாகத் தரப்பு விரைவாகப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு சகஜமான சூழ்நிலையை ஏற்படுத்துவதும் மிகவும் அரிதான விஷயமாகி வருகின்றன. அரசியல் கட்சி, தொழிற்சங்கம், தொழில் நிறுவன நிர்வாகம் மற்றும் அறக்கட்டளைகள் போன்றவற்றில் தலைமைப்பதவி அல்லது அதற்கு அடுத்த நிலையிலான பதவிகள் போன்றவற்றிற்காகப் பல்வேறு தரப்பினர் ஆசையும் பிரயாசையும் படும்போது, தலைமையினால் முதலில் அது அலட்சியப்படுத்தப்படுவதும், நாளடைவில் உரிமைப் போர்களினால் விரிசல் ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகம் இரண்டு அணிகளாகப் பிரிந்து அவ்வமைப்புகளையே பலவீனப்படுத்துவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள்தாமே.....?

காட்சி தருவதற்கு உச்ச ஸ்தாயி வரை கடவுள் காத்திருக்கலாம்.

கன்னத்தில் அறைவதற்கு உச்ச ஸ்தாயி வரை கணவனோ, காதலனோ காத்திருக்கலாம்......

ஆனால்......

கண்ணெதிரே முளைவிடும் சிறு பிரச்சினைகள் உச்ச ஸ்தாயிக்கும் அதற்கு அப்பாலும் வளர்வதற்காக நம்மில் எவரும் காத்திருக்கத் தேவையில்லை. அப்படிக் காத்திருப்பது புத்திசாலித்தனமும் இல்லை. கடவுளை விடவும் சினிமாக் கணவன் அல்லது காதலனைவிடவும் விரைவாக நாம் செயல்பட வேண்டும்.

அப்போதுதான்..........

கடவுள் ஆகாவிட்டாலும் கதாநாயகன்களாக உருவெடுப்போம்..... நிஜ வாழ்க்கையில். 

                                 நன்றி: தினமணி  + (எஸ்.ஸ்ரீதுரை)  


இயற்கையை நேசிப்போம்
 அன்புடன்
விவசாயி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துரைக்க வாருங்கள்