விவசாயம்


விவசாயம் இன்றி சமுதாயம் வாழ்ந்துவிட இயலாது.

இயற்கைக்கு முறன்பட்டால் விவசாயம் நிலைத்து நிற்க இயலாது

29.8.14

என்னைத் தொட்ட உண்மைச் செய்தி

படித்ததில் பிடித்தது - 02
 

என்னைத் தொட்ட உண்மைச் செய்தி


கோபிகிருஷ்ணா ஒரு முன்னணி அட்வகேட். கனடாவிலிருக்கும் அவருடைய உறவினர் சொன்ன அந்த விஷயம், இவரை வெகுவாக யோசிக்க வைத்தது.

என்ன அது?

ஓர் இசைக் குழந்தை!...



கனடா உறவினருக்கு ஒரு பெண்குழந்தை. சின்ன வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தனி அறை. அதில் முழுக்க முழுக்க இசை வாத்தியங்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

பியானோ, கிட்டார், வயலின், வீணை, கோட்டு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், கீ போர்ட் இப்படி அத்தனை இசைக் கருவிகளும் அந்தக் குழந்தைக்கு நட்பு பாராட்ட காத்திருக்கும்.

எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அந்தந்த சமயங்களில் அந்தக் குழந்தை இசைக் கருவிகளுடன் பேசும், விளையாடும், வருடும், சத்தங்களை சுவாசிக்கும்.

கருவிகள் பழுதுபட்டால் சுணங்காமல் சீர் செய்து கொடுத்தார் அப்பா. குழந்தை வளர்ந்தாள். டாக்டருக்குப் படித்தாள். அத்துடன் தனியே ஒரு இசைக் குழு வைத்து அசத்துகிறார்.

வளரும் சூழ்நிலை நிறைய மாற்றங்களை, பொற்காலங்களை ஏற்படுத்தித்தரும் என்கிற விஷயம்தான் கோபியை யோசிக்க வைத்தது.
பலன்?

திருமணமானதும் மனைவியிடம் இதைச் சொன்னார். கலந்து பேசினார்கள்.

பலன்?

கனடா தம்பதிகளைவிட புதிதாய், மேலும் சிறப்பாய் ஒரு புதிய முயற்சிக்கு தீர்மானித்தார்கள்.

திருமதி சுமதி வாசகர்களுக்கு நன்கு அறிந்தவர்தான். பிரபல வக்கீல், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர். மிகவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெகு பர்சனலாக இருந்தாலும், நல்ல நோக்கம் கருதி தங்கள் முயற்சியைப் பற்றி பேசினார்.

அதை அவர் குரலிலேயே கேட்போமா?

"கோபி சொன்னதும்..... அந்த நோக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது.

குழந்தைகளை அது அதன் போக்கிலே விட்டுடணும்னு சொல்றதை ஒப்புக்க முடியாது. நாம எதை நல்லதுன்னு நினைக்கறமோ அதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கறது தப்பில்லைன்னு நினைக்கறேன்.

சாப்பிட, ஸ்கூலுக்குப் போக, படிக்க கத்துத்தரலையா?

இது அதைவிட ஒருபடி உசத்தி! அபிமன்யு வயித்துல இருக்கும்போதே சக்கர வியூகம் கத்துக்கிட்டதா இருக்கே?

நோக்கம், பிறக்கும் குழந்தை ஒரு நல்ல இந்தியக் குடிமகனாய் இருக்க வேண்டும். நாம் தேசத்திற்குச் செய்யும் தொண்டு அது! 


அடிப்படையாக இசையை எடுத்துக்கொண்டோம். காரணம்?

இசை நம்மை பக்குவப்படுத்தும். மிதக்க வைக்கும். மனசை லேசாக்கும். பரவசம் தரும். நெகிழ்வோம். மனசு சரியில்லாத ஒரு மூடில் இசை நம்மை மாத்துது இல்லையா? இசை குரூரத்தை வேரறுக்கும். இசைதான் மனித வாழ்வின் அடி நாதம்.

கவிதை, இலக்கியம், இசை, ஓவியம் இவைகள் மனிதனை மனிதனாய் தொடர வைக்கும் என்பது என் கருத்து.

தாய்மைப் பேறு அடைந்து இரண்டு மாதத்தில் எங்கள் முயற்சியை ஆரம்பித்தோம்.

அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இசை ஒலிக்க ஆரம்பித்தது. ஹாலில், சமையல் கட்டில், வராந்தாவில் என்று எல்லா இடத்திலும் காற்றுபோல வீட்டுல் இசை உள் நிரம்பி இருந்தது, இசை. பாடல்களா, அதுவா இதுவான்னு எதுவும்னே தீர்மானம் பண்ணிக்கலை.

இசை! அவ்வளவுதான்! எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் ரவிசங்கர், ஹரி பிரசாத் சௌராஸியா, ஜாகீர் ஹுசைன், அல்லாரக்கா, பர்வீன் சுல்தான், வெஸ்டர்ன் கிளாஸிக்கல், தவிர இந்தியா டுடே கலக்ஷென்ல ஸ்பேஸ், விண்ட், ஸீ இப்படி எல்லா கேஸட்டும் போட்டுட்டே இருந்தோம்.

தாயின் வயிற்றில் நிரம்பும் உணவு குழந்தைக்கு போய்ச் சேர்வதுபோல, இசையும், நல்ல சிந்தனைகளும் போய்ச் சேரும் என்று திட்டவட்டமாக நம்பினோம்.

உணர்ந்தேன்.

என் கணவர் இதில் சிரத்தையாக ஒத்துழைத்தார். தூங்கும்போது கூட அரை மணிக்கு ஒருதரம் எழுந்து அனிச்சையாக பாடல் ஒலிக்க, அவருக்குப் பழகிப் போய்விட்டது.
**********************
குறிப்பு:   இது 1998-க்கு 2 - 3 வருடங்கள் முன்பு
**********************

இதை வயிற்றுக்குள்ளிருந்த குழந்தை ரசிக்க ஆரம்பித்தாள்! எப்படி என்பதைச் சொல்வதைவிட உணர்ந்துதான் பார்க்க வேண்டும்.

வழக்கமாய்..... பசி இருந்தால் கூட கோர்ட் வேலைகளை முடித்துவிட்டுத்தான் உணவு பற்றி யோசிப்பேன். ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் பசி என்னை உணர்த்தும், படுத்தும். இதை பெண்கள் உணர்ந்திருப்பார்கள்.

அதேபோல நம் மனோநிலையும் இதில் முக்கியம்.

நம்மை உணர வைக்கும்.

சந்தோஷமாய் இருக்கும்போது முகம், மலர்ந்து தெரிவது போல, குழந்தை மகிழ்ச்சியாய் உள்ளே இருப்பதை நம் மனோநிலையின் பரவசம் உணர்த்தும். 

நிஜம்.

அடுத்த கட்டம் போனேன். அதற்குக் காரணம் இருந்தது. நம் தேசம், போராடி சுதந்திரம் பெற்ற தேசம். ஆனால் நம்மவர்களுக்கு இருக்கும் சுதந்திர உணர்வு போதாது என்பது என் தாழ்மையான கருத்து.

"இன்டிபென்டன்ஸ் டே"- படத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக களத்தில் இறங்குவதைப் பார்த்து கைதட்டும் நம்மவர்கள், நம் நாட்டுச் சுதந்திர தினத்தன்றுகூட அந்த உணர்வு மறந்து இருப்பது வேதனையில்லையா?
தீர்மானித்தேன்.

அடுத்த தலைமுறைக்கும் அந்த உணர்வை ஊட்ட வேண்டியது மிக முக்கியம்.

எனவேதான், தனியே இருக்கும் சமயங்களில் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவேன்.

கதை சொல்லுவேன்.

திருப்பூர் குமரன் கதை, வாஞ்சிநாதன், வ.உ.சி., சுப்ரமணிய பாரதியார் கதை, இதையெல்லாம் சொல்வேன்.

தலையைக் குனிந்து வயிற்றைப் பார்த்து, மானசீகமாகக் குழந்தையிடம் பேசுவேன்.

கணவர்கூட வயிற்றில் வாய்வைத்துப் பேசுவார். குழந்தையை அழைப்பார்.

உங்களால் நம்புவது கடினம். ஆனால் குழந்தை நகர்வாள். உள்ளே மாறுபட்ட அசைவு இருக்கும். அழைப்புக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்.

இதை நீங்களும் முயன்று, உணர்ந்து பார்க்கலாம்.

என் பெற்றோர் எத்தனையோ நல்லது செய்திருக்கிறார்கள். நான் என் உயரத்தை அடைந்திருக்கிறேன். நாளை என் குழந்தை இன்னும் சிறப்பாக நல்ல இந்திய பிரஜையாக வரவேண்டும். அதுதான் என் விருப்பம். அதற்கே இத்தனை முயற்சிகளும்." சொல்லி முடித்தார் சுமதி.

குழந்தைக்கு "சிம்மாசனா" என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். 'சிம்மு'- என்று செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள். பளிச்சென்று ஆயிரம் வாட் பல்புபோல அழகாய்ச் சிரிக்கிறது குழந்தை.

கணவர் கோபியிடம் கேட்கிறோம்.

பதில் வருகிறது.

"என் குழந்தை என்பதற்காகச் சொல்லவில்லை. எங்கள் முயற்சி நிச்சயம் பலித்திருக்கிறது.

ஒரு வயதாகிறது. குழந்தை அத்தனை அறிவுபூர்வமாய் வெளிப்படுகிறாள். சொல்வதை மகா நுணுக்கமாய்ப் புரிந்து கொள்கிறாள்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பூஜை அறைக்குச் சென்று விடுகிறாள். தேசியக் கொடி, ஆஞ்சநேயர் படம் பார்த்துக் கும்பிடுகிறாள்.

வழியில் சிறு காகித கிழிசல் இருந்தால்கூட உடனே எடுத்துவிடுவாள். நம் கையிலோ, தானாகவோ போய் குப்பைத் தொட்டியிலே போட்டுவிடுகிறாள்.

இத்தனை கேஸ் கட்டுகள் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கிறதே, தொட்டுக் கலைப்பதில்லை. டிஸிப்ளின். அம்மா அவளுக்கென்று செய்து கொடுத்திருக்கும் சிறுசிறு கேஸ் கட்டுகளை (ஐஸ்கிரீம் கம்பெனி, லாலிபாப் கம்பெனி, சில்ட்ரன் Vs சிம்மு) மட்டும் எடு்த்துக் கொண்டு சந்தோஷப்படுவாள்.

மெஹந்தியாகட்டும், மடோனா, ரிக்கி மார்ட்டின் ஆகட்டும் கேட்டதும் அவளிடம் ஒரு துள்ளல் வரும். கால்கள் நடனம் ஆடும். கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டால் பெரிய மனுஷி மாதிரி ரசித்துக் கேட்பாள். 

நிறைய சொல்லலாம்.

ஆனால் நாங்கள் அசந்து போனது இரண்டு சம்பவங்களில் மட்டுமே.

ஒன்று-

என் உறவுப் பெண், சிம்முவை அழைத்து அழைத்து ஓய்ந்து விட்டாள். அதே உறவுப் பெண் எங்கள் எல்லோர் வேண்டுகோளுக்காகவும் பாடத் துவங்கியதும், சிம்மு போய் அவள் மடியில் உட்கார்ந்தாள்!

இரண்டு-

சமீபத்தில் 'ஏஸியா நெட்' டெலிவிஷனில் ஒரு மலையாளப் படம்! பெயர் 'சர்க்கம்'!

அதன் கிளைமாக்ஸ் ரொம்ப உருக்கமானது. கர்நாடக சங்கீதம் பாடல் பாடப்பட்டு ஒரு காரக்டரின் முடங்கிப்போன கைகளுக்கு அசைவு வரும்! எல்லோரும் அந்தக் காட்சியில் உறைந்து போயிருக்க... திரும்பி எதேச்சையாகப் பார்த்தோம்.

சிம்முவின் விழிகளில் கண்ணீர். உடலில் அந்தப் பரவசம்! நெகிழ்ச்சி! கடவுளே வரம் செய்தீர், நன்றி."

                                                                 ***-- நன்றி ----- எஸ்.பி.எஸ்  -  குங்குமம்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்தச் செய்தி 1998-ல் குங்குமம் இதழில் படித்தது. இச்செய்தியின் உந்துதலால் நான் அறிந்து கொண்டவற்றின் வெளிப்பாடுதான் "நல்ல குடும்பம் நமது லட்சியமாகட்டும்" என்ற பதிவில் கொடுத்திருப்பது. அதற்கான இணைப்பு இங்கே. தொடர்புடைய மேலும் சில விசயங்கள் நான் படித்தது அடுத்த பதிவுகளில் கொடுக்க இருக்கிறேன்.

நன்மக்களை விரும்பி, தம்பதியர் சில முயற்சிகளை எடுத்துக்கொள்ளலாம். தங்கள் சூழ்நிலைக்கும் மனோபாவங்களுக்கும் ஏற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். நம் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும். 

*************************************************************************

இயற்கையை நேசிப்போம்
அன்புடன்
விவசாயி.
-------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துரைக்க வாருங்கள்